டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம்: கவாஸ்கர், லாரா சாதனையை முறியடித்த ஜோ ரூட்
- பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது.
- ஷபீக், ஷான் மசூத், ஆகா சல்மான் ஆகியோர் சதமடித்தனர்.
கராச்சி:
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 492 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 172 ரன்னும், ஹாரி புரூக் 141 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 167 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35 வது சதத்தை விளாசி அசத்தியுள்ளார்.
இதையடுத்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா, பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான், இலங்கை வீரர் ஜெயவர்த்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் பட்டியலில் சச்சின் (51), முதலிடத்திலும், காலிஸ் (45) 2வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் (41) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.