ஷகிப் அல் ஹசனுக்கு பேட் பரிசளித்த விராட் கோலி: காரணம் இதுதான்
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.
- வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் விரைவில் ஓய்வுபெற உள்ளார்.
கான்பூர்:
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
வங்கதேச அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் வங்கதேசத்தில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. முதலில் ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 285 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹசனைச் சந்தித்து, தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார்.
ஷகிப் அல் ஹசன் விரைவில் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.