இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: ரச்சின் ரவீந்திரா- வில்லியம்சனுக்கு இடமில்லை
- இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மிட்ச் ஹே மற்றும் நாதன் ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியானது மீண்டும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், இஷ் சோதி, ஹென்றி நிக்கோலஸ், வில் யங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மேற்கொண்டு இந்த அணியில் மிட்ச் ஹே மற்றும் நாதன் ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் கேன் வில்லியம்சன், மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லோக்கி ஃபெர்குசன், சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங்.