சிக்ஸர் மழை பொழிந்த லிவிங்ஸ்டன்.. மோசமான சாதனை படைத்த ஸ்டார்க்
- முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலிய அணி 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
மழைக்காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி ப்ரூக் (58 பந்தில் 87 ரன்), டக்கெட் (62 பந்தில் 63 ரன்), லிவிங்ஸ்டன் (27 பந்தில் 62 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்கள் குவித்தது.
பின்னர் 313 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து 186 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 50 ஆவது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த ஓவரில் பேட்டிங் செய்த லிவிங்ஸ்டன் 6,0,6,6,6,4 என 28 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த ஆஸ்திரேலிய பவுலர் என்ற மோசமான சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.
இதற்க்கு முன்னதாக ஒரே ஓவரில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து சைமன் டேவிஸ், கிரேக் மெக்டெர்மாட், சேவியர் டோஹெர்டி, ஆடம் ஜாம்பா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் இந்த மோசமான சாதனையை கைவசம் வைத்திருந்தனர்.