பரபரப்பான கட்டத்தில் காலே டெஸ்ட்: கைகொடுக்குமா ரச்சின் ரவீந்திரா போராட்டம்
- இலங்கை அணி 2வது இன்னிங்சில் 309 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து அணி வெற்றிபெற 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
காலே:
இலங்கை, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் குவித்தார்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஒரூர்க் 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
35 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. கருணரத்னே 83 ரன்களும் சண்டிமால் 61 ரன்களும் அடித்தனர்.
நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 7 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இலங்கை அணி துல்லியமாகப் பந்து வீசியது. இதனால் நியூசிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். வில்லியம்சன், பிளெண்டல் தலா 30 ரன்னும், டாம் லாதம் 28 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், 4-ம் நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 68 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. அதேபோல், இலங்கை வெற்றி பெற 2 விக்கெட்டுகள் தேவை என்பதால் பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.