கிரிக்கெட் (Cricket)

ஊக்கமருந்து சர்ச்சை: இலங்கை வீரர் டிக்வெல்லாவுக்கு விளையாட தடை

Published On 2024-08-16 16:29 GMT   |   Update On 2024-08-16 16:29 GMT
  • லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது நிரோஷன் டிக்வெல்லா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தொடக்க வீரரான நிரோஷன் டிக்வெல்லா. இவர், இலங்கை அணிக்காக 2014-ம் ஆண்டு அறிமுகமான நிலையில் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31.45 சராசரியில் 1,604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30.98 சராசரியில் 2,757 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கொண்டு 28 டி20 போட்டிகளில் 480 ரன்களைச் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நிரோஷன் டிக்வெல்லாவை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் கொக்கெய்ன் உட்கொண்டதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்தும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக அவர் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்லாமல் பயிற்சி உட்பட விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இனி கிரிக்கெட் விளையாடமுடியாமல் போவதுடன், எந்தவொரு போட்டியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாது என்பதால் அவரது கிரிக்கெட் கெரியர் இத்துடன் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கோவிட்-19 நெறிமுறையை மீறியதால் அவருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த எல்பிஎல் தொடரில் கலே மார்வெல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய டிக்வெல்லா, அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார். இந்த சீசனில், அவர் 10 இன்னிங்ஸ்களில் 153.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 184 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News