கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் 2025: மெகா ஏலத்தின் விதிமுறையில் மாற்றம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2024-09-26 04:42 GMT   |   Update On 2024-09-26 04:42 GMT
  • இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
  • ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மும்பை:

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தான முடிவை பிசிசிஐ விரைவில் அறிவிக்க இருக்கிறது.

முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. இந்த சூழலில் வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.

ஆர்டிஎம் கார்டுகளை எத்தனை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியது. இதில் பங்கு பெற்ற அணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறினர். எனினும் பெரும்பாலான அணிகள் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும் மூன்று வீரர்களை ஆர்.டி எம் கார்டு வைத்து மீண்டும் வாங்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.ஆனால் இதற்கு சில அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்க பிசிசிஐ காலம் தாழ்த்தி வந்தது.

இந்த சூழலில் இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் அல்லாமல் முன்னணி வீரர்கள் வெறும் ஐந்து வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும் என்ற எண்ணிக்கையையும் பிசிசிஐ இறுதிச் செய்ய உள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

இந்த ஐந்து வீரர்களில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் அல்லது ஐந்து வீரர்களுமே உள்ளூர் வீரராக இருக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மெகா ஏலத்திற்கு முன்பு வெறும் ஐந்து வீரர்களை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். ஆர்டிஎம் வசதி கிடையாது என்ற அறிவிப்பு வெளியானால் அது சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்கு அது பெரிய இடியாக வந்து விழும்.

பிசிசிஐ யின் இந்த முடிவுக்கு ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News