கிரிக்கெட்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்.. முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாக். அணி 158/4

Published On 2024-08-21 14:42 GMT   |   Update On 2024-08-21 14:42 GMT
  • வங்கதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
  • மழை காரணமாக போட்டியில் இடையூறு ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கம்தான் கிடைத்தது. அந்த அணியின் அப்துல்லா ஷபிக் 2 ரன்களிலும் அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து களணிறங்கிய பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

இரண்டாவது வீரராக களமிறங்கிய சயிம் ஆயுப் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். இவரும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சௌத் ஷகீல் பொறுமையாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார்.

இதனால் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து158 ரன்களை எடுத்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. ஷகீல் மற்றும் ரிஸ்வான் முறையே 57 மற்றும் 24 ரன்களை எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் சார்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்மூத் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக போட்டி துவங்கும் முன்பே மழை காரணமாக டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு 3 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்களை சேர்த்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. 

Tags:    

Similar News