கிரிக்கெட் (Cricket)

கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்த வித்தியாசமான யுக்திகளை பயன்படுத்தும் பாகிஸ்தான்

Published On 2024-10-22 01:21 GMT   |   Update On 2024-10-22 01:21 GMT
  • பாகிஸ்தான் - இங்கிலாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
  • பொதுவாக ராவல்பிண்டி மைதானம் பேட்டிங்குக்கு கைகொடுக்கும்.

ராவல்பிண்டி:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளும் முல்தானில் நடந்தது. தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து மலைக்க வைத்ததுடன் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஆனால் 2-வது டெஸ்டுக்குரிய ஆடுகளம் முழுக்க முழுக்க சுழலுக்கு உகந்ததாக மாற்றப்பட்டது. இதனால் வெகுவாக தடுமாறிய இங்கிலாந்து தங்களது 20 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் சஜித்கான், நமன் அலி ஆகியோரிடம் பறிகொடுத்ததுடன், 152 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை விரும்புவதாக பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் வெளிப்படையாக கூறினார். இதையடுத்து சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தை உருவாக்கும்படி மைதான ஊழியர்கள் மற்றும் தேர்வு குழுவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுவாக ராவல்பிண்டி மைதானம் பேட்டிங்குக்கு கைகொடுக்கும். பெரிய அளவில் சுழற்பந்து வீச்சு எடுபடாது. ஆனால் இங்கிலாந்தை சுழல்ஜாலத்தால் மறுபடியும் முடக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள பாகிஸ்தான், அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

ஆடுகளத்தில் ஈரப்பதம் எதுமின்றி நன்கு உலரச் செய்வதற்காக ராட்சத மின்விசிறிகள், ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆடுகளத்தை முடிந்த அளவுக்கு தொடர்ந்து உலர்வாக வைக்கும் போது, வெயிலில் ஆடுகளம் சீக்கிரமாக உடைந்து வெடிப்பு உருவாகும். அதன் பிறகு சுழற்பந்து வீச்சுக்கு சொர்க்கமாக மாறி விடும். பாகிஸ்தான் அணியின் தேர்வாளர்கள் ஆகிப் ஜாவித், அலீம் தர், ஆசாத் ஷபிக், அசார் அலி ஆகியோர் மேற்பார்வையில் பிட்ச்சை தயார்படுத்தும் பணி நடக்கிறது. அதே சமயம் பாகிஸ்தானின் யுக்தியை முறியடிக்க இங்கிலாந்தும் ஆர்வமாக இருப்பதால் இந்த டெஸ்ட் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News