கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,500 ரன்கள்: டோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

Published On 2024-10-19 18:24 GMT   |   Update On 2024-10-19 18:24 GMT
  • இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது.
  • 2வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் 99 ரன்னில் அவுட் ஆனார்.

பெங்களூரு:

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

இதையடுத்து, 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சர்பராஸ் கானுடன், ரிஷப் பண்ட் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

இறுதியில், இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து சார்பில் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மையால் 4-ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் எம்.எஸ்.டோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்ட் 62 இன்னிங்சில் 2,500 ரன்களைக் கடந்துள்ளார்.

இதற்குமுன் எம்.எஸ்.டோனி 69 இன்னிங்சில் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். அந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து தற்போது புதிய சாதனை படைத்துள்ளார்.

Tags:    

Similar News