டெஸ்ட்டில் விளையாட விருப்பம் தெரிவித்த சாம்சன்.. கம்பீர் போட்ட கண்டிஷன்
- சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் திறன் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
- நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாட விரும்பவில்லை.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இதுவரை அவர் 50 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சிறப்பான திறமை இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பேசப்பட்டு வந்த வேளையில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு வழங்கினர். இந்த வாய்ப்பில் வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து தான் அசத்தினார். இதனை தொடர்ந்து பயிற்சியாளர் கம்பீர் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவிடம் டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் உள்ளதாக சாம்சன் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை அவர்கள் கூறியதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
இது குறித்து சாம்சன் கூறியதாவது:-
சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் திறன் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாட விரும்பவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதும் தான் என்னுடைய ஆசை. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் நிர்வாகம் என்னிடம் சிவப்பு பந்தில் பயிற்சி செய்யுமாறு கூறியுள்ளது.
அதுமட்டும் இன்றி உள்ளூர் கிரிக்கெட்டில் சிவப்பு பந்தில் சிறப்பாக விளையாடினால் டெஸ்ட் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நான் ரஞ்சி டிராபி போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருக்கிறேன். இந்திய அணியின் நிர்வாகமும் என்னிடம் அடுத்து அதைத்தான் விரும்புகிறது.
எனவே உள்ளூர் போட்டிகளில் சிவப்பு பந்தில் என்னுடைய திறமையை நிரூபித்து நிச்சயம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன்.
இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.