வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: சுப்மன்கில்- ரிஷப் பண்ட்க்கு ஓய்வு?
- முகமது சிராஜ், பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம்.
- ரோகித்சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ஆகியோர் டி20-யில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டனர்.
புதுடெல்லி:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் கான்பூரில் (27-ந் தேதி தொடக்கம்) நடக்கிறது. 20 ஓவர் தொடர் அக்டோபர் 6-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், வங்க தேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அக்டோபர் 16-ந்தேதி தொடங்குகிறது. வங்கதேச தொடர் முடிந்த பிறகு 3 நாள்கள் மட்டுமே இருப்பதால் டெஸ்ட் போட்டியைக் கருத்தில் கொண்டு கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்திய அணி 10 டெஸ்டில் விளையாட உள்ளது. இதேபோல அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியும் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு இந்திய அணி தற்போது 20 ஓவர் போட்டிகளை விட ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சுப்மன் கில்லை தவிர்த்து மேலும் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. முகமது சிராஜ், பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம். ரிஷப் பண்ட்டும் இதற்கான பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.
ரோகித்சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ஆகியோர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடங்களுக்கு எந்த வீரர்களை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்க்கப்படுகிறது.