2வது போட்டியிலும் வெற்றி: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 343 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
அபுதாபி:
அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 343 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி சதமடித்து 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெரைன் அரை சதமடித்து 67 ரன்கள் எடுத்தார். வியான் முல்டர் 43 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 40 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து 344 என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சில் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், அயர்லாந்து 30.3 ஓவரில் 169 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசாட் வில்லியம்ஸ் 3 விக்கெட்டும், நிகிடி, பார்டுயின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இரு அணிகள் மோதும் 3-வது போட்டி நாளை நடக்கிறது.