ஓவல் டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டெஸ்ட்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் போப் பொறுப்புடன் ஆடி சதமடித்து, 154 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் பென் டெக்க்ட் 86 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரை சதம் கடந்து 64 ரன்கள் எடுத்தார்.
கருணரத்னே 9 ரன்னும், குசால் மெண்டிஸ் 14 ரன்னும், மேத்யூஸ் 3 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். சண்டிமால் டக் அவுட்டானார்.
93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தத்தளித்தது. 6வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா-கமிந்து மெண்டிஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் போட்டி இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
6வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 69 ரன்னில் வெளியேறினார். கமிந்து மெண்டிஸ் 64 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் ஜோஷ் ஹல், ஒல்லி ஸ்டோன் தலா 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.