மகளிர் டி20 உலகக் கோப்பை: இளம் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்
- 9-வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது.
துபாய்:
இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 9-வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது.
மொத்தம் நடக்கும் 23 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.114 மட்டுமே. ரூ.340, ரூ.570, 910 விலைகளிலும் விற்கப்படுகிறது. முக்கிய பிரமுகர்களுக்கான சொகுசு டிக்கெட் ரூ.15,930 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. இணையதளத்தில் மட்டுமின்றி மைதானத்தில் உள்ள கவுண்ட்டரிலும் டிக்கெட் விற்பனை நடைபெறும். ஒரே நாளில் 2 ஆட்டம் நடக்கும் போது, ஒரு டிக்கெட்டை பயன்படுத்தி இரு ஆட்டத்தையும் கண்டுகளிக்கலாம் என்றும், புதிய தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் போட்டியை நேரில் காண அனுமதி இலவசம் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.