வான்கடே டெஸ்ட் இரண்டு அணிகளுக்கும் புதிய சவால்: நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்
- முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
- மும்பை வான்கடே டெஸ்டில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூரு மற்றும் புனேயில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
3-வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் ஒயிட்வாஷ் ஆகும். சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகக்கூடாது என்ற எண்ணத்தில் இந்தியா விளையாடும். அதேவேளையில் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் ஆக்கிவிட வேண்டும் என நியூசிலாந்து நினைக்கும்.
இந்த நிலையில் வான்கடே டெஸ்ட் குறித்து டாம் லாதம் கூறியதாவது:-
இந்தியா மிகவும் தரமான அணி. கடந்த இரண்டு மூன்று வாரங்களாக அவர்கள் நினைத்தபடி அவர்களுக்கு அமையவில்லை. இருந்தபோதிலும், ஒரேநாள் இரவில் அவர்களை மோசமான அணியாக உருவாக்கிவிடாது. அவர்கள் 1 முதல் 15 பேர் கொண்ட சூப்பர் ஸ்டார்களை பெற்றுள்ளனர். அவர்கள் அவர்களுடைய சிறந்த ஆட்டத்தை நாளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம். இரண்டு அணிகளுக்கும் மீண்டும் ஒரு புதிய சாவல். சிறந்த போட்டியாக இருக்கப் போகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. நாங்கள் போட்டியின் முடிவைவிட, வெற்றிக்கான முக்கியமான தருணத்தில் கவனம் செலுத்த முயற்சி செய்வோம்.
இவ்வாறு டாம் லாதம் தெரிவித்துள்ளார்.