வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி: அரையிறுதி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதன் மூலம் உலகக் கோப்பை அரையிறுதிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னேறியது.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 57 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிளெட்சர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 142 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஹேலி மேத்யூஸ்- கியானா ஜோசப் ஜோடி தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டு 102 ரன்கள் குவித்தது.
கியானா ஜோசப் 52 ரன்னிலும் ஹேலி மேத்யூஸ் 50 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷெமைன் காம்பெல்லே 5 ரன்னிலும் டீன்ட்ரா டாட்டின் 27 ரன்னிலும் வெளியேறினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 142 ரன்கள் எடுத்தது.