இதென்ன வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு வந்த சோதனை.. 1 ரன்னுக்கு சட்டென சரிந்த 8 விக்கெட்டுகள்
- வெறும் ஒரு ரன் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
- அணியின் 5 முதல் 10-வது வீரர் வரை அனைவரும் டக் அவுட் ஆகினர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கத்திய ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மானியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஆஸ்திரேலியா அணி வெறும் ஒரு ரன் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கத்திய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்திருந்த நிலையில் 53 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் மேற்கத்திய ஆஸ்திரேலியா எடுத்த 1 ரன்னும் வைடு வடிவில் வந்தது. இந்த அணியின் 5 முதல் 10 வீரர் வரை அனைவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
டாஸ்மானியா வீரர் பியூ வெப்ஸ்டர் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார். மறுப்பக்கம் பில்லி ஸ்டான்லேக் 12 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய டாஸ்மானியா அணி 8.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தத் தொடரின் வரலாற்றில் பதிவான இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக தெற்கு ஆஸ்திரேலியா அணி 2003 ஆம் ஆண்டு டாஸ்மானியா அணிக்கு எதிராக 51 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியும் மிக மோசமான எட்டு விக்கெட் இழப்புகளில் ஒன்றாக அமைந்தது.