கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 1வது டெஸ்ட் டிரா

Published On 2024-08-12 01:31 GMT   |   Update On 2024-08-12 08:45 GMT
  • வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையே 1வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
  • இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 357 ரன்களை சேர்த்தது. பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 233 ரன்களையே எடுத்தது.

124 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து 154 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டோனி டி ஜோர்ஜி 14 ரன்னுடனும், எய்டன் மார்க்ரம் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஐந்தாம் நாளில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிராத்வைட் ரன் எடுக்காமலும், மிகைல் லூயிஸ் 9 ரன்னும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

அடுத்து களமிறங்கிய கீசி கார்டி 31 ரன்களையும், அலிக் அத்தானாஸ் 92 ரன்களையும், கவேம் ஹாட்ஜ் 29 ரன்களிலும் அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் சமனில் முடிக்கப்பட்டது.

இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 15 ஆம் தேதி கயானாவில் தொடங்க இருக்கிறது.

Tags:    

Similar News