டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 3-வது அணி: மிரட்டிய ஜிம்பாப்வே
- முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்தது.
- டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகிறது. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றனர்.
இதில் நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் சீஷெல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சீஷெல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 91, டி மருமணி 86 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய சீஷெல்ஸ் அணி 6.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்த 3-வது என்ற சாதனையை ஜிம்பாப்வே அணி படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் (314) நேபாள் அணி உள்ளது. 2-வது இடத்தில் (297) இந்திய அணி உள்ளது.