விளையாட்டு

தமிழக வீராங்கனை ரோசி மீனா

தேசிய விளையாட்டு போட்டி- போல்வால்ட் பிரிவில் புதிய சாதனை படைத்தார் தமிழக வீராங்கனை ரோசி மீனா

Published On 2022-10-02 11:16 GMT   |   Update On 2022-10-02 11:16 GMT
  • 2014-ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனையை 8 ஆண்டு காலத்திற்கு பிறகு முறியடித்தார்.
  • தமிழக வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காந்திநகர் மைதானத்தில் நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) போட்டியில் தமிழக வீராங்கனை ரோசி மீனா பால்ராஜ், 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தையும் அவர் தட்டிச் சென்றார்.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் தமிழக வீராங்கனை வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. 8 ஆண்டு காலத்திற்கு பிறகு இந்த சாதனையை சென்னையை சேர்ந்த 24 வயது ரோசி மீனா முறியடித்துள்ளார். இந்த போட்டியில் 4 மீட்டர் உயரம் தாண்டிய தமிழக வீராங்கனைகள் பவித்ரா வெள்ளிப்பதக்கமும், 3.90 மீட்டர் உயரம் தாண்டிய பாரனிகா வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 


ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். தூத்துக்குடியை சேர்ந்த அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் (தகுதி இலக்கு 8.25 மீட்டர்) தகுதி பெற்றார். 

Tags:    

Similar News