டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம்- நீரஜ் சோப்ராவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து
- டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா.
- அவரது தொடர் வெற்றி, இந்திய தடகளத்துறை மேம்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
சுரிட்ச்:
சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச் சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார்.
இதன் மூலம் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றார். இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையும் நீரஜ் சோப்ராவிற்கு கிடைத்துள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ராவை பிரதமர் பாராட்டியுள்ளார். டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா கோப்பையை வென்றதன் மூலம் இந்த தொடர் வரலாற்றில் இந்தியர் ஒருவர் முதல் முறையாக சாதனையை படைத்திருக்கிறார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்று வரலாறு படைத்த முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள், அவர் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார்.
அவரது தொடர் வெற்றிகள் இந்திய தடகளத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு செயல்களை வெளிக் காட்டுகின்றன. இவ்வாறு பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதேபோல் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர், இது அவரது வெற்றி மகுடத்தில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு இறகு என்றும் குறிப்பிட்டுள்ளார்.