விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பிரியன்ஷு ரஜாவத்

Published On 2024-07-05 06:16 GMT   |   Update On 2024-07-05 06:16 GMT
  • ரஜாவத்தை தவிர, மூன்றாம் நிலை இந்திய மகளிர் இரட்டையர் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடியும் காலிறுதிக்கு முன்னேறியது.
  • இந்திய ஜோடி அடுத்ததாக சீன தைபேயின் பெய் ஷான் ஹ்சீ மற்றும் என்-ட்சு ஹங் ஜோடியை எதிர்கொள்கிறது.

இந்தியாவின் வளர்ந்து வரும் பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் கனடா ஓபனில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கனடா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் டகுமா ஒபயாஷியை நேர் கேம்களில் வீழ்த்தி முன்னேறினார்.

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் உலக தரவரிசையில் 39 இடத்தில் உள்ள ரஜாவத் 33-வது தரவரிசையில் உள்ள ஒபயாஷியை 21-19, 21-11 என்ற கணக்கில் 38 நிமிடங்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் முதல் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொள்கிறார்.

ரஜாவத்தை தவிர, மூன்றாம் நிலை இந்திய மகளிர் இரட்டையர் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடியும் காலிறுதிக்கு முன்னேறியது.

48 நிமிடங்கள் நீடித்த 16-வது சுற்று ஆட்டத்தில் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி 17-21, 21-7, 21-8 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் நடாஸ்ஜா பி அந்தோனிசென் மற்றும் நெதர்லாந்தின் அலிசா டிர்டோசென்டோனோ ஜோடியை தோற்கடித்தது.

இந்திய ஜோடி அடுத்ததாக சீன தைபேயின் பெய் ஷான் ஹ்சீ மற்றும் என்-ட்சு ஹங் ஜோடியை எதிர்கொள்கிறது.

அனுபமா உபாத்யாயா மற்றும் தான்யா ஹேமந்த் இருவரும் தங்களது இரண்டாவது சுற்று பெண்கள் ஒற்றையர் ஆட்டங்களில் தோல்வியடைந்தனர்.

கனடாவின் மிச்செல் லீக்கு எதிராக அனுபமா கடுமையாக போராடி 14-21, 21-17, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். தன்யா 11-21, 13-21 என்ற நேர் கேம்களில் மூன்றாம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் தோல்வியடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான கிருஷ்ண பிரசாத் கரகா மற்றும் கே சாய் பிரதீக் ஜோடி 21-19, 18-21, 17-21 என்ற கேம் கணக்கில் சீன தைபேயின் பிங்-வீ லின் மற்றும் சிங் ஹெங் சூ ஜோடியிடம் தோல்வியடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் கபூர் மற்றும் ருத்விகா ஷிவானி காடே ஜோடியும் 15-21, 21-19, 9-21 என்ற கணக்கில் 8-ம் நிலை சீன தைபே ஜோடியான செங் குவான் சென் மற்றும் யின்-ஹுய் ஹுசு விடம் தோல்வியடைந்தது.

Tags:    

Similar News