விளையாட்டு (Sports)

கோவை அணியின் வெற்றி நீடிக்குமா?- திருச்சியுடன் இன்று மோதல்

Published On 2024-07-16 05:30 GMT   |   Update On 2024-07-16 05:31 GMT
  • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
  • நெல்லை-மதுரை அணிகள் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

கோவை:

8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. 11-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.

டி.என்.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் 13-ந் தேதி தொடங்கியது. 18-ந் தேதி வரை அங்கு போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும். நெல்லை-மதுரை அணிகள் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி தோல்வியை சந்திக்காமல் தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (13 ரன்), திருப்பூர் தமிழன்ஸ் (1 ரன்), நெல்லை ராயல் கிங்ஸ் (9 விக்கெட்) ஆகிய அணிகளை தோற்கடித்தது.

கடந்த ஆண்டையும் சேர்த்து தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று இருக்கிறது. கோவை அணியின் வெற்றி இன்றும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியின் பேட்டிங்கில் சச்சின் (169 ரன்), சுரேஷ்குமார் ஆகியோரும், பந்துவீச்சில் ஷாருக்கான், எம். முகமது (தலா 5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

திருச்சி அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 16 ரன்னில் தோற்றது. அதைத் தொடர்ந்து மதுரை பாந்தர்சை 67 ரன் வித்தியாசத்திலும், சேலம் ஸ்பார்டன்சை 35 ரன் வித்தியாசத்திலும் வென்றது.

Tags:    

Similar News