தமிழ்நாடு

விலைவாசி உயர்வை கண்டித்து சென்னையில் 9 இடங்களில் மறியல்-1000 பேர் கைது

Published On 2023-09-07 09:01 GMT   |   Update On 2023-09-07 09:01 GMT
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
  • மோடி ஆட்சியில் செயல்படும் திட்டம் எல்லாமே உருப்படாத திட்டம்தான்.

சென்னை:

பாரதிய ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கிண்டி ரயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

கிண்டி ரெயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். அங்கு வந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

ரெயில் மறியலையொட்டி கிண்டி ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அப்போது போலீசாருக்கும் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ரெயில் மறியல். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விலைவாசி பிரச்சினை இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

மோடி ஆட்சியில் செயல்படும் திட்டம் எல்லாமே உருப்படாத திட்டம்தான்.

தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விலைவாசியை கட்டுப்படுத்த கோரி போராட்டம் நடத்தி வருகிறோம்.

வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி எதிர் கட்சிகளை திசை திருப்பதான் இந்தியா என்ற பெயரை 'பாரத்' என்று மாற்றுகிறார்கள். அதனைத் தொடர்ந்து ஒரேநாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

அனைத்து இளைஞர்களுக்கும் சரியான வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அண்ணா சாலையில் தபால் நிலையம் முன்பு மத்திய குழு உறுப்பி னர் சம்பத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப் பட்டனர்.

திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் லோகநாதன் மற்றும் ஜெயராமன், பாக்கியம், கதிர்வேலு உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கைதாகியுள்ளனர்.

சென்னையில் மட்டும் 9 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News