தமிழ்நாடு (Tamil Nadu)

மலைச்சரிவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட 2 காட்டெருமைகள்- 6 வயது ஆண் காட்டெருமை உயிரிழப்பு

Published On 2023-12-06 08:04 GMT   |   Update On 2023-12-06 08:04 GMT
  • 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது.
  • கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே கிராம பகுதிகளில் மட்டுமல்லாமல் நகர பகுதிகளிலும், பகல் நேரங்களிலும் காட்டெருமைகள் சர்வ சாதராணமாக உலா வருகின்றன.

சாலைகளின் நடுவிலும், ஒரத்திலும் நடந்து செல்வதால், வாகன ஓட்டிகளும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த வழியாக பயணித்து வருகின்றனர்.

குன்னூர் அருகே உள்ள சேலாஸ் சோல்ராக் செல்லும் சாலையில் நீர்மம்பட்டி என்ற இ்டத்தில் மலைச்சரிவில் 2 காட்டெருமைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருந்தது.

இதில் 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது. இதில் காட்டெருமை காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதனையடுத்து காட்டெருமையின் உடலை அங்கேயே புதைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், காட்டெருமைகளை விரட்ட வனக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே நின்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News