செய்திகள் (Tamil News)
ராஜதுரை

கார் டிரைவர் கடத்தி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-10-08 06:36 GMT   |   Update On 2016-10-08 06:36 GMT
கார் டிரைவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்தவர் துரை(வயது 45). விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கார் நிறுத்தத்தில் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார்.

இவர் கடந்த 5-2-2011 அன்று உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காப்புக்காட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, துரையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்ன கொட்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை(23), அதேஊரை சேர்ந்த இளைஞர்கள் 2 பேருடன் சேர்ந்து, விழுப்புரத்தில் இருந்து வேப்பூர் செல்லவேண்டும் என்று காரை வாடகைக்கு எடுத்து வந்ததும், எடைக்கல் அருகே வைத்து டிரைவர் துரையை கொலை செய்து காப்புக்காட்டில் வீசிவிட்டு, காரை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜதுரை உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த வழக்கு கள்ளக்குறிச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டு நீதிபதி ஜூலியட் புஷ்பா, விசாரித்து வந்தார். இந்தநிலையில் காரை வாடகைக்கு எடுத்து சென்று டிரைவர் துரையை கொலை செய்து, காரை கடத்திச் சென்ற ராஜதுரைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

ராஜதுரை ஏற்கனவே விருத்தாசலத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News