செய்திகள் (Tamil News)

பழனி கோவிலில் இ-உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தலாம்

Published On 2017-01-25 05:21 GMT   |   Update On 2017-01-25 05:21 GMT
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோவிலில் பக்தர்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் காணிக்கை (பணம்) செலுத்த ‘இ’ உண்டியல் வசதி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பழனி:

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோவிலில் பக்தர்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் காணிக்கை (பணம்) செலுத்த ‘இ’ உண்டியல் வசதி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இக்கோவிலில் 17 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்படுகிறது. இதில் ஒரு கோடிக்கு மேல் வசூல் ஆகிறது. இந்நிலையில் தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவிலில் துலாபாரம் காணிக்கை செலுத்தும் இடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கி மூலம் டிபாசிட் எந்திரம் ‘இ’ உண்டியல் கடந்த நவம்பரில் வைக்கப்பட்டது. அது நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

இதில் ரூ.1000, ரூ.500, ரூ.2000 நோட்டுகளை பக்தர்கள் டிபாசிட் செய்கின்றனர். பக்தர்கள் செலுத்திய பணம் நேரம், தேதி விபரங்கள் மற்றும் ‘பழனியாண்டவர் அருள் பெறுக’ என ஆங்கிலத்தில் ரசீதும் வருகிறது.

கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி வரும் பக்தர்கள் டிபாசிட் எந்திரத்தில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமும், ரூபாய் நோட்டுகளை வழங்கியும் காணிக்கை செலுத்தலாம். அவை நேரடியாக கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பிற இடங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பழனி கோவிலில் 12 நாட்களுக்கு பின்னர் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 81 லட்சம் காணிக்கை கிடைத்தது. 590 கிராம் தங்கம், 9 ஆயிரத்து 30 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்தன.

இதில் 10 ரூபாய் நாணயங்கள் மட்டும் ரூ.5 லட்சத்துக்கு இருந்தன. உண்டியல் பணம் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Similar News