செய்திகள் (Tamil News)
ஆகாஷ்

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 3-ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

Published On 2017-01-25 11:36 GMT   |   Update On 2017-01-25 11:36 GMT
மயிலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 3-ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.
மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் புதுக்காலனியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் ஆகாஷ்(வயது 8). மயிலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 18-ந்தேதி காலை ஆகாஷ் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்றான். பள்ளி அருகே ரோட்டை கடந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவன் மீது மோதியது. இதில் ஆகாஷ் படுகாயம் அடைந்தான்.

உடனடியாக அவனை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு ஆகாசுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து ஆகாசின் தாயாரிடம் நீங்கள் விரும்பினால் உங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் கூறினர். அதற்கு ஆகாசின் தாயார் சம்மதம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆகாசின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

ஆகாசின் தந்தை பாலு கடந்த 45 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். தற்போது ஆகாசும் விபத்தில் சிக்கி மூளைசாவு அடைந்ததால் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Similar News