செய்திகள் (Tamil News)

அழகான உச்சரிப்புடன் தமிழில் பேசிய கவர்னர்

Published On 2018-01-08 05:53 GMT   |   Update On 2018-01-08 05:53 GMT
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல்நாளான இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழில் அழகான உச்சரிப்புடன் தனது உரையை தொடங்கினார். #TNAssembly
சென்னை:

தமிழக கவர்னராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி ஏற்ற கவர்னர் பன்வாரிலால் தமிழ் மொழியை கற்று வருகிறார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அவர் இதற்காக கவர்னர் மாளிகையில் தனி ஆசிரியரை நியமனம் செய்து தமிழ் படித்து வருகிறார். அவர் தமிழ் படிக்க தொடங்கி இருப்பது இன்று சட்டசபை கூட்டத்தில் உரை நிகழ்த்த தொடங்கியபோது தெரிந்தது.

கவர்னர் உரை தொடக்கத்தின் போது அவர், “வணக்கம்” என்றார். பிறகு “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று கூறினார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மேஜையை தட்டி கவர்னரின் தமிழ் வாழ்த்துக்கு வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பேச தொடங்கினார். உடனே அவரை பார்த்து கவர்னர் சிரித்துக் கொண்டே, “உட்காருங்க... உட்காருங்க..” என்று தமிழில் சொன்னார். அதை கேட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆச்சரியம் அடைந்தனர். பிறகு அவர் ஆங்கிலத்தில் உங்களுக்கு இது தொடர்பாக பேசுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அந்த சமயத்தில் நீங்கள் கேள்விகளை எழுப்புங்கள் என்று கூறி விட்டு உரையாற்ற தொடங்கினார்.

உரையை வாசித்து முடித்ததும் முடிவில் “நன்றி, வணக்கம்” என்று தமிழில் கூறினார். #TamilNews

Similar News