செய்திகள் (Tamil News)

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-02-02 03:27 GMT   |   Update On 2018-02-02 03:27 GMT
குத்தகை நிலத்தை அபகரிக்க முயற்சித்த பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், பொன்னேரியை சேர்ந்த ஆர்.சிவப்பிரகாசம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘பொன்னேரியில் உள்ள எனது பூர்வீக சொத்தான 15 ஆயிரம் சதுர அடி நிலம் மாதம் ரூ.25 வாடகைக்கு 1963-ம் ஆண்டு ‘பர்மா ஷெல்’ என்ற பெட்ரோலிய நிறுவனம் 20 ஆண்டு குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. பின்னர் அந்த நிறுவனத்தை மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எடுத்துக்கொண்டது.

இந்த நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு மீண்டும் 30 ஆண்டுகளுக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தினர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினர். அப்போது மாத வாடகையாக ரூ.64 ஆயிரம் தர வேண்டும் என்று கூறினேன். இதை எதிர்த்து பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை, கீழ் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து பாரத் பெட்ரோலியம் எனது நிலத்தில் பெட்ரோல் இருப்பு வைக்க வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னையில் உள்ள வெடிமருந்து இணை முதன்மை கட்டுப்பாட்டாளருக்கு மனு செய்தேன். இந்த மனு மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே எனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க வெடிமருந்து இணை முதன்மை கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் எனது நிலத்தில் இருந்து வெளியேற பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

15 ஆயிரம் சதுர அடி நிலத்திற்கு சொற்ப தொகையை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வாடகையாக கொடுத்துள்ளது. அத்துடன் நிலத்தை அபகரிக்க சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் நடவடிக்கை எடுத்துள்ளதை ஏற்க முடியாது.

எனவே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 45 நாட்களுக் குள் அந்த இடத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். மீறினால் மனுதாரர் போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்தலாம்.

அத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தவறான நடவடிக்கைக்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ பாலகுருகுலம் பள்ளிக்கு 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இந்த வழக்கை வருகிற மார்ச் 26-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். #tamilnews

Similar News