செய்திகள் (Tamil News)

நேரு பூங்கா-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயில் மார்ச் மாதம் ஓடும்

Published On 2018-02-02 06:42 GMT   |   Update On 2018-02-02 06:41 GMT
நேரு பூங்கா-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வழித்தட சுரங்க பாதைகளில் மார்ச் மாதம் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை:

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.

கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரையில் உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்-நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் இடையே மெட்ரோ ரெயிலுக்கு பெரிதும் வரவேற்பு கிடைத்ததையொட்டி மெட்ரோ ரெயில் வழித்தடப் பாதை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

நேரு பூங்கா- சென்ட்ரல் இடையேயான சுரங்கப் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதேபோல சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வழித்தட சுரங்கப்பாதை பணிகளும் முடிந்துள்ளன.

இந்த வழித்தட பாதைகளில் மார்ச் மாதம் இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மெட்ரோ ரெயில் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நேரு பூங்கா-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வழித்தட பாதைகளில் மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்துள்ளன. ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்ததும் மார்ச் மாதம் இறுதியில் பயணிகளுக்கான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News