செய்திகள்
மாயமான ரங்கநாயகி. சசிதரன்

சேலத்தில் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி கணவன்-மகனுடன் தற்கொலையா?

Published On 2018-06-02 06:14 GMT   |   Update On 2018-06-02 06:14 GMT
சேலத்தில் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்தார் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தற்கொலை செய்துகொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் சீலநயாக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் மோகன். ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி ரங்கநாயகி (56) சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி கமி‌ஷனராகவும், கமி‌ஷனருக்கு உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

ரங்கநாயகி சங்ககிரியில் உள்ள தனது தங்கை விஜயசெல்வியின் செல்போனுக்கு தனது மகன் சசிதரன் (28) மூலம் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு மகன் மற்றும் கணவருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்.

அதில் என்னையும், பெற்றோரையும் எனது மனைவி டார்ச்சர் செய்து வருவதால் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்ய உள்ளோம் என்று சசிதரன் கூறி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயசெல்வி அன்னதானப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அப்போது ரங்கநாயகியின் குலதெய்வ கோவில் மைசூரில் இருப்பதால் அவர் அங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. மேலும் ஒரு தனிப்படை போலீசார் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதியிலும் தேடினர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

இதற்கிடையே ரங்கநாயகியின் மகன் சசிதரன் உருக்கமான வீடியோவை வெளியிட்டார். அதில், எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனது நண்பர்கள், உறவினர்கள் என்னடா இப்படி பண்ணிட்டியே என்று நினைப்பவர்களுக்கு வேறு வழி இல்லை. அதனால் தான் இப்படி பண்ணினேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். வீட்டு ஓனர்ஸ், பக்கத்தில் இருப்பவர்கள், எல்லோருக்கும் ரெம்ப சிரமம் கொடுத்து விட்டோம்.

அவர்கள் வீட்டிற்கு முன்பு நின்று கத்தியதால் மானம், மரியாதை போய் விட்டது. அவங்க வீட்டிற்குள் நிறைய பிர்ச்சனை வந்து விட்டது. எங்களால் இனி மேல் இது போல நடக்காது. அதனால் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்.

ஓசூரில் எங்க வீட்டு ஓனருக்கு மிகவும் சிரமமாக தான் இருக்கும். உங்களிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். முடிந்த வரை நார்மலாக இருக்க நண்பர்கள் உதவி செய்யுங்கள். எவ்வளவு சந்தோ‌ஷமாக இருக்க ஆசைப்பட்டோமோ அது எல்லாம் முடிஞ்சுடுச்சி.

இந்த ஒரு பெண்ணால, அந்த ஒரு குடும்பத்தால எங்கள் குடும்பம் முடுஞ்சிடுச்சி. இவ்வளவு அசிங்க, அசிங்கமாக பேசியதற்கு அப்புறம் உயிர் வாழ்வதை விட நாங்கள் போய் விடலாம், அதனால் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் எங்களை மன்னிச்சுடுங்க என்று கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார். இதனால் அவர்களது நிலைமை என்ன ஆனது என்பது தெரியாமல் உள்ளதால் உறவினர்கள் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மேட்டூர் மாதேஸ்வரன் மலை பகுதியில் சென்ற போது அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் மாதேஸ்வரன் மலை, மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையிலான ஒரு தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மற்றொரு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான தனிப்படையினர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் தேடி வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் குறித்து எந்த தகவலும் இன்று காலை வரை கிடைக்கவில்லை. மேலும் ரங்கநாயகியின் உறவினர்கள் மாயமான 3 பேரும் எங்கு உள்ளனர் என்பதை கண்டறிய ஜோதிடரை நாடியுள்ளனர்.

இதனால் அவர்கள் எங்கு உள்ளனர் என்பதில் தற்போது வரை மர்மமாக உள்ளது. மேலும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் தற்கொலை செய்திருப்பார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து தேடி வரும் போலீசார் இன்று மாலைக்குள் இந்த விவகாரத்திற்கு முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். #Tamilnews
Tags:    

Similar News