செய்திகள்
மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்பு குழுவினர் பேட்டியளித்த காட்சி.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் போலீசார் அத்துமீறல் - உண்மை கண்டறியும் குழு தகவல்

Published On 2018-06-04 08:57 GMT   |   Update On 2018-06-04 08:57 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காவல் துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Thoothukudifiring
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த 22 -ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த குழுவில் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் தலைமையில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குனர்கள், மூத்த வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இடம்பெற்று உள்ளனர்.

இந்த குழுவினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தனர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள், தடியடியில் காயமடைந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி சூடு, தடியடி, அத்துமீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வாக்குமூலம் பெறப்பட்டன.

விசாரணையை தொடர்ந்து அந்த குழு சார்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றிடிபென் ஆகியோர் வெளியிட்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைதி பேச்சு வார்த்தைக்கு அனைத்து தரப்பு மக்களையும் மாவட்ட நிர்வாகம் அழைக்கவில்லை. போராட்டக்காரர்களை பிரித்தாளும் சூழ்ச்சியாகவே தெரிகிறது. மேலும் பேச்சுவார்த்தையில் மாவட்ட கலெக்டர் பங்கேற்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கலெக்டரே முன்னிலை வகித்து நடத்தியுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிடுவதற்கு பதிலாக கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தது, ஏற்கனவே வந்த லட்சக்கணக்கான மக்களை கணக்கில் எடுத்து கொள்ளாததை காட்டுகிறது. இது நிர்வாகத்தின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறது.

100 நாட்களாக போராடிய மக்களை கலெக்டர் சந்திக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது. மக்களை தமிழக அமைச்சர்களோ, மத்திய மந்திரிகளோ சந்திக்கவில்லை.



144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல் துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு நவீன ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக கூறப்படும் நபர்கள் அந்த இடத்தில் இல்லை.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளே மக்கள் பெருந்திரளாக போராட்டத்தில் பங்கேற்க காரணம். மே 23-ந் தேதி தூத்துக்குடியில் அதிக அளவில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளும் உறவினர்களும் போலீசாரால் தாக்கப்பட்டனர்.

அண்ணா நகர் பகுதியில் போலீசார், வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி மக்களை அடித்து, இளைஞர்களை கைது செய்தனர். காவல்துறையின் கொடூரமான தாக்குதலால் பலர் மாற்றுத்திறனாளியாக மாற்றப்பட்டனர். மேலும் உளவியல் நோயாளியாக பலர் உருவாக்கப்பட்டனர்.

எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். ஸ்டெர்லைட் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டு ஆலை இருந்த இடம் வெறுமையாக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்காக நினைவு சின்னம் அமைக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் நடந்த சட்டத்திற்கு புறம்பான தொடர் தேடலுக்கும், கைதுகளுக்கு, துன்புறுத்தல்களுக்கும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இன்னும் 2 வாரங்களில் இந்த குழு துப்பாக்கி சூடு குறித்து முழுமையான அறிக்கையை வெளியிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். #Thoothukudifiring


Tags:    

Similar News