செய்திகள்

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு

Published On 2018-06-11 05:51 GMT   |   Update On 2018-06-11 05:51 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்கிறது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு மலைப்பகுதியில் உள்ள கொடுமுடியாறு அணைபகுதியில் நேற்று அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பெய்தது. அப்பகுதியில் இன்று காலை வரை 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

பாபநாசம் அணைப்பகுதியில் இன்று காலை வரை 12 சென்டி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 5 செ.மீ. மழையும், கருப்பாநதி யில் 8 செ.மீ. மழையும், குண்டாறில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மழை காரணமாக அனைத்து அணைகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 533 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து இன்று 61.15 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 220 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று 65 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 26 அடி உயர்ந்து இன்று 91.53 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 996 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று 76 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 81.10 அடியாக உள்ளது.

கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 59 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 66.75 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 59.06 அடியாகவும் இருக்கிறது.

இதேபோல் குண்டாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 28.88 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 92 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 9 அடியாகவும் உள்ளது.

களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணை பகுதியில் இன்றும் கனமழை கொட்டியதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று பெய்த மழையில் 20 அடி உயர்ந்து 32 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று ஒரே நாளில் மேலும் 20 அடி உயர்ந்து 52.50 அடியாகி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

குற்றாலம் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் இன்று தண்ணீர் நன்றாக கொட்டியது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதுபோல் புலியருவி, சிற்றருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் நன்றாக கொட்டி வருவதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

களக்காடு தலையணையில் மட்டும் தொடர்ந்து இன்றும் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. இதனால் அங்கு குளிக்க அனுமதிக் கப்படவில்லை. தாமிரபரணி ஆற்றில் இன்று வழக்கத்தை விட அதிகளவு தண்ணீர் ஓடுகிறது.
Tags:    

Similar News