செய்திகள்
லால்பேட்டையில் மின்சார வாரிய வணிக உதவியாளர் தமிழினியனை (முகத்தை மூடியிருப்பவர்) போலீசார் கைது செய்தனர்.

கடைக்கு மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் கைது

Published On 2018-07-14 06:52 GMT   |   Update On 2018-07-14 06:52 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மின்சார வாரிய அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தில் வீராணம் ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தனது பெட்டி கடைக்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மனு கொடுத்திருந்தார். ஆனால் மின் இணைப்பு வழங்கவில்லை.

அவர் கொடுத்த மனுவின் மீது தற்போதைய நிலை என்ன? என்று விசாரிப்பதற்காக இளஞ்செழியன் மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த வணிக உதவியாளரான தமிழினியன் (வயது 45) என்பவர், கடைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளஞ்செழியன், பணம் தருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத இளஞ்செழியன், இது குறித்து கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் இளஞ்செழியனிடம் கொடுத்து, அதனை தமிழினியனிடம் கொடுப்பது குறித்து ஆலோசனை கூறினர்.

அதன்படி லால்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்ற இளஞ்செழியன், அங்கிருந்த வணிக உதவியாளர் தமிழினியனிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு வாடிக்கையாளர் போல் வந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெர்லின்ராஜாசிங் மற்றும் போலீசார் கையும், களவுமாக தமிழினியனை பிடித்து கைது செய்தனர்.
Tags:    

Similar News