குளச்சல் அருகே மது போதையில் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தி தூங்கிய டிரைவர்
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள அரசு பயணியர் விடுதி அருகே நேற்று மாலை ஒரு ஆட்டோ மெதுவாக ஊர்ந்து வந்தது. நடுரோட்டில் திடீரென நிறுத்தப்பட்ட ஆட்டோ, அதன்பின்பு அங்கிருந்து நகரவில்லை. அந்த வழியாக வந்த வாகனங்கள் நடுரோட்டில் நின்ற ஆட்டோ மீது மோதாமல் இருக்க மெதுவாக அதனை கடந்து சென்றனர்.
நேரம் செல்ல, செல்ல கனரக வாகனங்கள் அந்த வழியாக வந்தன. அவற்றால் நடுரோட்டில் நின்ற ஆட்டோவை தாண்டி செல்ல முடியவில்லை. அந்த வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
வாகனங்கள் எழுப்பிய சைரன் ஒலி, வாகன ஓட்டிகளின் கூச்சல் ஆகியவற்றை கேட்ட பின்பும் அந்த ஆட்டோ அங்கிருந்து நகரவில்லை. அதன்பின்பே வாகன ஓட்டிகள், ஆட்டோவின் அருகில் சென்று பார்த்தனர். அங்கு ஆட்டோ டிரைவர், இருக்கையில் அமர்ந்து குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்ப முயன்றும் முடியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் இது பற்றி குளச்சல் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கிருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வந்து பார்த்த போது டிரைவர் மது போதை மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கியது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த டிரைவரை போதையை தெளிய வைத்து எழுப்பினர். போதை தெளிந்ததும் டிரைவர் ஆவேசமாகிவிட்டார். என்னை எப்படி எழுப்பலாம்? என்று கேட்டு அவர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
போக்குவரத்தை பாதிக்க செய்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது பற்றி போலீசார் எடுத்து கூறியும் அந்த டிரைவர் சமரசம் ஆகாமல் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு கொண்டு சென்றபின்பு அவரை பற்றிய விபரங்களை விசாரித்தனர். இதில்அந்த டிரைவர் குளச்சலை அடுத்த உடையார்விளையை சேர்ந்த செல்வகுமார் (வயது 35) என்பதும் திங்கள் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர் எனவும் தெரியவந்தது.
ஒரு சவாரிக்காக குளச்சல் வந்தவர் இங்கு மது குடித்துவிட்டு மட்டையாகிவிட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் நேற்று குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.