செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2018-07-27 08:22 GMT   |   Update On 2018-07-27 08:22 GMT
மேட்டூர் அணையில் இருந்து நேற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக 46 ஆயிரத்து 465 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு 60 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery
சேலம்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பியது.

இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வந்து கொண்டிருப்பதால் அணை முழு கொள்ளளவை எட்டியது.

கடந்த 19-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 48 ஆயிரத்து 65 கன அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து 61 ஆயிரத்து 291 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து நேற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக 46 ஆயிரத்து 465 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு 60 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று 120.2 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 120.31 அடியாக உயர்ந்தது.

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆறு சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களிலும் விவசாயத்தை செழித்தோங்க வைப்பதுடன் அந்த மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டம் வழியாக செல்லும் காவிரி ஆறு ஈரோடு, நாமக்கல், கரூர் மாயனூர் கதவணை வழியாக திருச்சி முக்கொம்பை அடைகிறது. அங்கிருந்து கொள்ளிடம், காவிரி என இரண்டாக பிரிந்து கல்லணையை சென்றடைகிறது. கல்லணையில் இருந்து காவிரி ஆறு 4 ஆக பிரிகிறது.

இதில் கல்லணை கால்வாய் பூதலூர் தஞ்சாவூர், நெய்வாசல், முத்துப்பேட்டை வழியாக புதுக்கோட்டை வரை செல்கிறது. கல்லணை காவிரி ஆறு திருவையாறு, கொராடச்சேரி, மன்னார்குடி, தோப்புதுறை வழியாக சென்று கடலில் கலக்கிறது.

கொராடாச்சேரியில் இருந்து ஒரு பிரிவு நாகூர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. மற்றொரு பிரிவு திருவையாறில் இருந்து கும்பகோணம் சென்று காரைக்கால், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய 3 இடங்களில் கடலில் கலக்கிறது.

5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து 9 நாட்கள் ஆகியும் இன்று வரை கடைமடையின் கிளை கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.

இதற்கு அரசு ஆறுகளை தூர்வாராதது தான் முழு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அணை முழு கொள்ளளவை எட்டியும் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் இந்த நிலை நீடிப்பதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு 9 நாட்கள் ஆகியும் இன்று வரை கடை மடையை தண்ணீர் வந்தடையவில்லை. இதற்கு ஆறுகளை தூர்வாரதது தான் முழு காரணம். தூர்வாராததால் பாசன கொள்ளளவு தண்ணீரை ஆற்றில் கொண்டு செல்லும் போது உடைப்பு ஏற்படுகிறது. இதனால் பாதி அளவு தண்ணீரே காவிரி மற்றும் கிளை ஆறுகளில் கொண்டு செல்ல முடிகிறது.

இது குறித்து அரசுக்கு பல முறை எடுத்து கூறியும் செவி சாய்க்கவில்லை. தூர்வார ஒதுக்கப்படும் நிதி மொத்த தேவையில் 10 சதவீதமாக உள்ளது. அதையும் நகர பகுதி மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தூர்வாருவது போல காண்பித்து விட்டு காட்டு பகுதியில் எங்கும் தூர்வாருவதில்லை. அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபட்டு அந்த நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் பாதி பாசனம் கொண்ட காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளை தூர்வார எந்தவித சிறப்பு திட்டமும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக காவிரியின் கிளை பாசன ஆறுகளான கோதையாறு, பாமினி ஆறு, வெண்ணாறு, குடமுருட்டி ஆறு உள்பட பல பெரும்பாலான ஆறுகள் தூர்வாரப்படாததால் அந்த ஆறுகளில் குறைந்த அளவே தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கடை மடைக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆறுகளை தூர்வாராததால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தற்போது கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரில் மிக குறைந்த அளவு கடலூர் மாவட்டம் வீராணத்திற்கு செல்கிறது. மற்ற தண்ணீர் அனைத்தும் கடலுக்கு வீணாக செல்கிறது.



இதனால் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் நாகை மாவட்ட கடை மடை பகுதிகளான சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம், திருமருகள், கீரையூர் ஆகிய பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை.

இதே போல காவிரியின் கிளை ஆறுகள் மூலம் பாசனம் பெறும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, நன்னிலம் ஆகிய பகுதிகளுக்கும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி ஆகிய பகுதிகளுக்கும் இது வரை தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

எனவே கடை மடையின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய ஆறுகளை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே விவசாயிகள் பயன் அடைய முடியும். இதனால் அதனை அரசு முழுமையாக அதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Metturdam #Cauvery
Tags:    

Similar News