ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்- 14 மாணவிகளை பலாத்காரம் செய்த விடுதி மேலாளர்
- பல மாணவிகளை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பலவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்தும், இனிமையாக பேசியும் தனது வலையில் விழ வைத்துள்ளார்.
- புகாரை அடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அவரை பணியிடை நீக்கம் செய்து அறிவித்து உள்ளது.
விஜயவாடா:
ஆந்திர மாநிலம் எல்லூரு நகரில் ஒரு பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. அங்கு தங்கிய சில மாணவிகள், விடுதி மேலாளர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பலாத்காரம் செய்ததாகவும் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ்குழு விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
பெண்கள் விடுதியை நடத்தி வந்தவர் சசிகுமார். இவர் பிற்படுத்தப்பட்டோர் ஆண்கள் விடுதியின் நல அலுவலராகவும் பணி செய்து வந்துள்ளார்.
சசிகுமாருக்கு எல்லூரு நகரின் மைய பகுதியில் ஒரு ஸ்டூடியோவும் உள்ளது. சசிகுமாரின் விடுதியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகள் வாடகைக்கு தங்கி படித்து வந்துள்ளனர்.
கொரோனா காலத்தில் ஏற்கனவே விடுதி நடத்தியவர்கள் அதை தொடராமல் நிறுத்திவிட்டதால், விடுதி நிர்வாகத்தை சசிகுமார் நடத்தி வந்துள்ளார். அதை அவர் அரசு அனுமதியின்றி நடத்தி வந்துள்ளார். அவர் தனது இரண்டாவது மனைவியை விடுதி வார்டனாகவும், தனது மருமகளை பராமரிப்பாளராகவும் வைத்துள்ளார். மாணவிகள் கொடுத்துள்ள புகாரில் தங்களை படத்துக்கு அழைத்து சென்றதாகவும், பின்னாளில் செக்ஸ் தொந்தரவு கொடுத்து பாலியல் பாலாத்காரம் செய்ததாகவும் கூறி உள்ளனர். அவரது விருப்பத்துக்கு இணங்காதவர்களை தாக்கியும், தண்டித்தும் வந்துள்ளார்.
கடந்த 15-ந்தேதி ஒரு மாணவியை அழகாக போட்டோ எடுத்துத் தருவதாக ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மறுநாள்தான் அவரை விடுதிக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் புகாரில் கூறி உள்ளார். அவர் இதேபோல பல மாணவிகளை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பலவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்தும், இனிமையாக பேசியும் தனது வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார்.
இதுவரை 7 மாணவிகள் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இதையறிந்த சசிகுமார் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. புகாரை அடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அவரை பணியிடை நீக்கம் செய்து அறிவித்து உள்ளது.
போலீசாரின் விசாரணையில் 14 மாணவிகள் சசிகுமாரின் தாக்குதலுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகி உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சசிகுமாரின் விடுதியில் 45 மாணவிகள் தங்கியுள்ளனர். அவர்களில் 2 பேர் கல்லூரி மாணவிகள், மற்றவர்கள் பள்ளி மாணவிகள். "பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தலைமறைவான சசிகுமாரையும், அவரது அத்துமீறலுக்கு உடந்தையாக இருந்த அவரது 2-வது மனைவியையும் தேடி வருவதாகவும்" போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.