செய்திகள்

தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2018-08-03 00:48 GMT   |   Update On 2018-08-03 00:48 GMT
தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வருகிற 5-ந் தேதி தொடங்கி நடைபெறும் இந்தி தேர்வை 1¾ லட்சம் பேர் எழுதுகின்றனர்.
சென்னை:

சமீப காலமாக தமிழகத்தில் பிறமொழிகளை படிக்கும் ஆர்வம் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போதே பிற மொழி பாடங்கள் இருக்கிறதா? என்பதை பார்த்தே தங்களின் குழந்தைகளை பெற்றோர் சேர்ப்பதை காண முடிகிறது. அந்தவகையில், தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

இந்தி தேர்வுகளை நடத்தி வரும் இந்தி பிரசார சபை, ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி, ஆகஸ்டு) இந்தி தேர்வுகளை நடத்துகிறது. அடிப்படை தேர்வாக பிராத்மிக் முதல் பிரவீண் வரை தேர்வுகளை நடத்துகிறது. இந்த மாதம், 5, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இந்தி தேர்வை சுமார் 1¾ லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் அடிப்படை தேர்வான பிராத்மிக் தேர்வை மட்டும் 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

5-ந்தேதி பிராத்மிக், மத்தியமா, ராஷ்டிரபாஷா ஆகிய தேர்வுகள் நடக்க உள்ளது. 11 மற்றும் 12-ந்தேதிகளில் பிரவேஷிகா (3 தாள்), விஷாரத் பூர்வார்த் (3 தாள்), விஷாரத் உத்தரார்த் மற்றும் பிரவீண் பூர்வார்த், பிரவீண் உத்தரார்த் ஆகிய தேர்வுகள் நடக்கிறது.

மேலும் விஷாரத் உத்தரார்த்துக்கான வாய்மொழி தேர்வு நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் 378 மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 158 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தி தேர்வு குறித்து இந்தி பிரசார சபை பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராஜ் கூறும்போது, ‘தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்படும் தேர்வில் மட்டும் சுமார் 1¾ லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்’ என்றார். #tamilnews
Tags:    

Similar News