செய்திகள்
ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது

Published On 2018-08-11 06:06 GMT   |   Update On 2018-08-11 06:06 GMT
ஒகேனக்கலுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி வரும் நீரின் அளவு 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:

கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் 2-வது முறையாக நிரம்பின. இதனால் நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.

இந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் நீர் திறப்பு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கனஅடியாக உள்ளது. கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 62 ஆயிரத்து 319 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஒகேனக்கலுக்கு நேற்று காலை 9 மணிக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று பகல் 12 மணிக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.

நேற்று மாலை 6 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

ஐந்தருவியில் பாறைகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி

இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஐந்தருவியில் உள்ள பாறைகள் வெளியே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை பரந்து விரிந்த காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலும் தண்ணீர் செல்கிறது.

தொடர்ந்து இன்று 34-வது நாளாக பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கல் வந்திருந்தனர். வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ளதால் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியவில்லை.

மேலும் இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்களது வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினார்கள். ஒகேனக்கல்லில் உள்ள விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நாகமரை-பண்ணவாடி இடையே இயக்கப்பட்டு வந்த படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. ஊட்டமலை, நாகமரை உள்ளிட்ட காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் குவிக்கப்பட்டு யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery

Tags:    

Similar News