செய்திகள்

செல்போன் பறித்த கொள்ளையர்களை லிப்ட் கேட்டு மடக்கிய வாலிபர்

Published On 2018-08-25 09:31 GMT   |   Update On 2018-08-25 09:31 GMT
கோயம்பேட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்களை மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்று இருவரையும் மடக்கி பிடித்தார்.
போரூர்:

சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் குற்றச் சம்பவங்கள் குறையவில்லை.

இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே 100 அடி ரோட்டில் செல்போன் பறித்துவிட்டு தப்பிய 2 பேரை வாலிபர் ஒருவர் மடக்கி பிடித்தார்.

சூளைமேடு பெரியார் பாதை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் நேற்று இரவு 10.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது 100 அடி ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் வெங்கடேஸ்வரனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஸ்வரன் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் ‘லிப்ட்’ கேட்டு அதில் ஏறினார்.

பின்னர் வண்டியை வேகமாக ஓட்டச் சொல்லி விரட்டிச் சென்றார். செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் இருவரும் கோயம்பேடு பஸ்நிலைய சிக்னல் அருகில் வேகமாக செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

உடனே சிக்னலில் இறங்கி ஓடிய வெங்கடேஸ்வரன் கொள்ளையர்கள் இருவரையும் மடக்கி பிடித்தார். பின்னர் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து தர்ம அடி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கொள்ளையர்கள் கோயம்பேட்டை சேர்ந்த சுதன், சூளைமேடு கார்த்திக் என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்று வேறு ஏதேனும் சம்பவங்களில் இருவரும் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

இதேபோல தேனாம்பேட்டையிலும் வாலிபர் ஒருவரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்ற வாலிபர் சினிமா பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் நண்பர்கள் 5 பேரும் சென்றனர். 2 மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஸ்ரீதரை கத்தியால் வெட்டிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News