செய்திகள்
தலங்கை ரெயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்சி

தண்டவாளத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது: பெங்களூர்-கோவை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

Published On 2018-08-31 05:20 GMT   |   Update On 2018-08-31 05:20 GMT
சோளிங்கர் அருகே ரெயில்வே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் கோவை-பெங்களூர் செல்லும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. #TrainStopped
வேலூர்:

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த தலங்கை ரெயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து பெங்களூர், கோவை மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் உள்ள உயர் அழுத்த மின் கம்பி இன்று காலை திடீரென அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டு ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் தலங்கை ரெயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது.



இதையடுத்து சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள்டக்கர் ரெயில் சோளிங்கர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதே போல அரக்கோணத்தில் இருந்து வேலூர் செல்லும் பாசஞ்சர் ரெயில் அரக்கோணத்தில் நின்றது.

மின்கம்பி அறுந்தது குறித்து தகவலறிந்த அரக்கோணம் காட்பாடி ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை 7.45 முதல் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடந்தது. நடுவழியில் நிறுத்தபட்ட ரெயில்களில் இருந்த பயணிகள் பாதிக்கபட்டனர்.

அரக்கோணத்தில் இருந்து வேலூர், காட்பாடி, ஆம்பூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் நடுவழியில் தவித்தனர். #TrainStopped

Tags:    

Similar News