செய்திகள்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டி வரும் புதிய தடுப்பணை.

பாலாற்றில் மேலும் ஒரு புதிய தடுப்பணை - ஆந்திர அரசு கட்டுகிறது

Published On 2018-09-03 06:15 GMT   |   Update On 2018-09-04 07:44 GMT
வாணியம்பாடி அருகே பெத்தவங்கா பகுதியில் பாலாற்றில் ஆந்திர அரசு மேலும் ஒரு புதிய தடுப்பணையை கட்டி வருவதை அறிந்த தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #APReservoir
வாணியம்பாடி:

கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழகத்தில் பாய்ந்தோடி வங்க கடலில் கலக்கிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 22 தடுப்பணை கட்டியுள்ளது.

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையான புல்லூரில் கனகநாச்சியம்மன் கோவில் அருகே ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு கட்டியிருந்த தடுப்பணையினால், தமிழகத்தின் பாலாற்று பகுதியில் தண்ணீர் வராமல் போனது. இந்நிலையில், மீண்டும் தடுப்பணையின் உயரத்தை மேலும் அதிகரித்து,12 அடியாக உயர்த்தி கட்டியது.

இதன் காரணமாக எப்போதுமே பாலாற்றில் தண்ணீர் வரமுடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழக-ஆந்திர எல்லையான புல்லூர் அருகே, கங்குந்தி பெத்தவங்கா என்னும் பெரும்பள்ளம் பகுதி உள்ளது.

இப்பகுதியையொட்டி, தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் வழியில் பாலாற்றின் கிளை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதியதாக தடுப்பணை கட்டி வருகிறது. ரூ.1 கோடி மதிப்பில் சுமார் 10 அடி உயரம், 10 அடி அகலத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இரும்பு, ஜல்லி, சிமெண்ட் கலவை கொண்டு திடமான தடுப்பணை கட்டப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது.

தொடர்ந்து, மேலும் சில தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் தமிழகத்துக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிரந்தரமாக தண்ணீர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.  #APReservoir



Tags:    

Similar News