திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி
திருவள்ளூர்:
‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர்.
தற்போது திருவள்ளூரை அடுத்த திருவலங்காடு ராஜேஷ் (20), முக்கரம்பாக்கம் பாஸ்கர் (38), விநாயகபுரம் முனி கிருஷ்ணன் (22) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதவிர 11 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. இவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 78 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான காரணம் குறித்து அறிய பரிசோதனை நடைபெறுகிறது.
இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகள் அஜிதா (3). மர்ம காய்ச்சலுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இந்த குழந்தை குணம் அடைந்துள்ளதாக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அஜிதா இன்று பரிதாபமாக உயிர் இழந்தாள்.
திருவள்ளூரை அடுத்த சின்ன எடப்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மகன் நித்திஷ் வீரா (6). மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டான். ஆனால் வழியிலேயே சிறுவன் நித்திஷ் வீரா பரிதாபமாக இறந்தான்.
டெங்கு காய்ச்சலுக்கு திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகள் சமீபத்தில் உயிர் இழந்தனர். இப்போது மேலும் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள்.