செய்திகள்

தமிழக மக்களுக்கு மோடி வில்லன்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2019-04-12 11:06 GMT   |   Update On 2019-04-12 11:13 GMT
தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வில்லன் என்று திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். #Loksabhaelections2019 #UdhayanidhiStalin
திண்டுக்கல்:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் சந்தைரோடு, பைபாஸ் சாலை, கோபால்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

மோடி ஆட்சியில் பணம் மதிப்பிழப்பின் போது நாடு முழுவதும் 150 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக 100 நாட்களாக மக்கள் போராடினர். இதில் மாணவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து மோடி ஆயிரம் பேரை காக்க 13 பேரை கொல்வதில் தவறில்லை என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் டி.வி.பார்க்கவில்லை என அலட்சியமாக கூறினார். இவர்களை பழி வாங்க வருகிற 18-ந் தேதி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் மத்தியில் ராகுல்காந்தி பிரதமாகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் பதவி வகிப்பார்கள்.

தி.மு.க. பதவி ஏற்றவுடன் விவசாய கடன், கல்விக்கடன், நகைக்கடன் ஆகியவை ரத்து செய்யப்படும். மேலும் மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிரிழந்தார். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல்லில் மருத்துவ கல்லூரி பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

சென்னை-மதுரை தேஜஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் திண்டுக்கல்லில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்.

திரைப்படத்தில்தான் வில்லன், காமெடியன்கள் இருப்பார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வில்லனாக உள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். அதே போல் அனைத்து தமிழக அமைச்சர்களும் காமெடியன்களாக உள்ளனர். மாம்பழம் அழுகிப் போய் விட்டது. அதனால்தான் ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்கின்றனர். முதல்வர் மற்றும் துணை முதல்வரை கடுமையாக விமர்சித்து விட்டு தற்போது மீண்டும் அவர்களுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #UdhayanidhiStalin
Tags:    

Similar News