செய்திகள்

திருச்சியில் அ.ம.மு.க. பிரமுகர் கொலை - காதல் பிரச்சினையில் தீர்த்துக்கட்டியது அம்பலம்

Published On 2019-05-08 10:47 GMT   |   Update On 2019-05-08 10:47 GMT
திருச்சியில் காதல் பிரச்சனை காரணமாக அமமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து மாணவியின் சகோதரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காதர் உசேன். ரெயில்வேயில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் ஜாவித் உசேன் (வயது 24), பொன்மலை பகுதி அ.ம.மு.க.வின் சிறுபான்மை பிரிவு செயலாளராக உள்ளார்.

டிப்ளமோ முடித்த ஜாவித் உசேன், சென்னை ஐ.சி.எப்.பில் அப்பரண்டீஸ் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். இதற்கிடையே பொன்மலை பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

மாணவி எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து அவரிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட மாணவி தன்னை பின் தொடர வேண்டாம், மீறி தொல்லை செய்தால் பெற்றோரிடம் சொல்வதாக கூறியுள்ளார்.

ஆனாலும் ஜாவித் உசேன் மாணவிக்கு அவ்வப்போது காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று ஜாவித் உசேன் பொன்மலை பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் மாமிசம் வாங்குவதற்காக சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து இறங்கினர்.

அவர்கள் திடீரென மாணவியை காதலிப்பது தொடர்பாக இருவரும் ஜாவித் உசேனிடம் கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டனர். அப்போது தாங்கள் எடுத்து வந்த வாளால் ஜாவித் உசேனை வெட்ட முயன்றனர்.

இதனால் ஜாவித் உசேன் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் 2 பேரும் வாளுடன் துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர். அதே பகுதியில் இருந்த ஆவின் பால் விநியோகம் செய்யும் மையத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்றும் ஆத்திரம் தீராத அவர்கள் பொறியில் சிக்கிய எலியை போல் ஜாவித் உசேனின் முகத்தில் வாளால் பயங்கரமாக வெட்டினர்.

இதில் அவரின் தலை சுக்கு நூறாக நொறுங்கியது. தங்களது ஆத்திரம் தீரும் வரை தொடர்ந்து வெட்டிய இருவரும் ஜாவித் உசேன் இறந்ததும் அங்கிருந்து புறப்பட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து அப்பகுதியினர் பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜாவித் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் துணை கமி‌ஷனர் நிஷா, உதவி கமி‌ஷனர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பிளஸ்-1 மாணவியின் சகோதரன், அவரின் நண்பர் என தெரிய வந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

அதே பகுதியில் பதுங்கி இருந்த மாணவியின் சகோதரன் கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பரான சரவணக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்புகள் உள்ளது.
Tags:    

Similar News