தமிழ்நாடு (Tamil Nadu)
பி.ஆர்.பாண்டியன்

முல்லைப்பெரியாறு விவகாரம்: மதுரையில் மார்ச்.15-ல் விவசாயிகள் உண்ணாவிரதம்- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

Published On 2022-02-16 08:17 GMT   |   Update On 2022-02-16 08:17 GMT
தமிழக அதிகாரிகளுக்கு தெரியாமல் பெரியாறு அணை பகுதியில் கேரள பிரதிநிதிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தேனி:

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச்.15-ந் தேதி மதுரையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தேனியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மை குறித்து கேரள அரசு தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறது. அணையின் உறுதி தன்மையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மேலும் அணை நிலவரத்தை கண்காணிக்க கேரள அரசு சார்பில் புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக அதிகாரிகளுக்கு தெரியாமல் பெரியாறு அணை பகுதியில் கேரள பிரதிநிதிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனால் முல்லைப் பெரியாறு அணை எந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு இனிமேலும் மவுனம் காக்காமல் தமிழக விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய கேரள அரசுக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

இந்த வி‌ஷயத்தில் மத்திய மற்றும் கேரள அரசுகளை கண்டித்தும், பேபி அணையை பலப்படுத்தி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரையில் மார்ச் 15-ந் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News