தமிழ்நாடு (Tamil Nadu)
வீட்டின் மேற்கூரை இடிந்து கிடப்பதை காணலாம்

தென்காசி மாவட்டத்தில் தொடர் கோடை மழை: வீடு இடிந்து தந்தை-மகள் பலி

Published On 2022-04-12 06:35 GMT   |   Update On 2022-04-12 09:14 GMT
தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து தந்தை-மகள் பலியான சம்பவம் வாகைகுளம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆழ்வார்குறிச்சி:

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள கடையம், தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, குற்றாலம், சிவகிரி ஆகிய பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

நேற்று மாலையில் கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், பாப்பாங்குளம், பொட்டல்புதூர் உள்ளிட்ட இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

ஆழ்வார்குறிச்சி அருகே வாகைக்குளத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீடு இடிந்து தந்தை-மகள் பலியாகினர். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

வாகைக்குளம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கல்யாண சுந்தரம் (வயது60), விவசாயி. இவருக்கு வேலம்மாள் (55) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 4-வது மகளான ரேவதிக்கு (25) இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களது வீடு பழைய காலத்து கட்டை குத்திய வீடாகும். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கடந்த சில நாட்களாக அவரது வீட்டில் மேற்கூரை சேதம் அடைந்து மழைநீர் வீட்டுக்குள் ஒழுகி வந்துள்ளது.

வீட்டுக்குள் தேங்கும் தண்ணீரை பாத்திரம் மூலம் இறைத்து வெளியே ஊற்றி விட்டு பின்னர் வீட்டுக்குள் தார்ப்பாயை விரித்து 3 பேரும் தூங்கி வந்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து மழை அதிகமாக பெய்ததால் வாடகை வீட்டுக்கு சென்று தங்குமாறு கூறி உள்ளனர்.

அதற்காக கல்யாண சுந்தரம் வேறு வீடு பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மழை பெய்து முடித்ததும் சுமார் இரவு 9 மணி அளவில் வழக்கம் போல 3 பேரும் தூங்க சென்றுள்ளனர். கல்யாண சுந்தரம் கட்டிலில் படுத்துள்ளார்.

அவரது அருகே கட்டிலுக்கு கீழ் அவரது மனைவி வேலம்மாளும், மகள் ரேவதி அவருக்கு அடுத்தபடியாக படுத்து தூங்கி உள்ளனர். இரவு 11 மணி அளவில் திடீரென வீட்டின் மேற்கூரை உட்புறமாக இடிந்து விழுந்தது. மேற்கூரை முழுவதுமாக 3 பேர் மீதும் விழுந்து அமுக்கியது.

இதனை கண்ட அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்து மேற்கூரைகளை அப்புறப்படுத்தி கல்யாண சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஆழ்வார்குறிச்சி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 3 பேரையும் மீட்டனர்.

இந்த விபத்தில் கல்யாண சுந்தரம், ரேவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வேலம்மாள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனே அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 2 பேரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து தந்தை-மகள் பலியான சம்பவம் வாகைகுளம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Similar News