தமிழ்நாடு

230 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்- மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Published On 2024-02-10 08:08 GMT   |   Update On 2024-02-10 08:08 GMT
  • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
  • மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கலந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்ட பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை இன்று ஆய்வு செய்தனர்.

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.

அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர். உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News